சுற்றுலாத் துறை வளாகம்

ஊர் சுற்றிப் பார்க்க விருப்பம் கொண்டவர்கள் ஒரே இடத்தில் எல்லாத் தகவல்களையும் பெறும் வகையில் அமைக்கப்பட்டது இந்த வளாகம். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைமை அலுவலகமும் பல்வேறு மாநில அரசுகளின் சுற்றுலாத் துறை அலுவலகங்களும் இங்குள்ளன. சுற்றுலாத் தலங்கள் பற்றிய தேவையான தகவல்கள் மட்டுமல்ல பயண ஏற்பாடுகள் பற்றிய விவரங்களையும் கூட எளிதில் பெற்றுச் செல்லலாம்.

அமைவிடம்:- வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொலைபேசி - 25388785.

டைடல் பூங்கா

தகவல் தொழில்நுட்பத்தின் திசையில் தமிழகம் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி டைடல் பூங்கா. இதுவொரு தமிழ்நாட்டு சிலிகான் பள்ளத்தாக்கு. இந்தச் சாலையே இப்போது புதுமணப்பெண் போல புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. உலகப் புகழ்பெற்ற கணினி நிறுவனங்களின் அலுவலகங்கள் இங்கு மையம் கொண்டுள்ளன. மிக விரிந்த பரப்பில் உருவாகியுள்ள டைடல் பூங்கா நவீன கட்டடக் கலை அழகின் அடையாளம். குட்டி நகரம் போல டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், டென்னிஸ் என பல விளையாட்டு வசதிகளும் உள்ளன. கனரா வங்கி, ஹிக்கின்பாதம்ஸ், புத்தக நிலையம், உணவகம் என உள்ளுக்குள்ளேயே ஓர் உலகம். இந்தப் பூங்காவில் மலர்கள் மலர்வதில்லை. இங்கு மென் பொருட்களே விளைபொருட்கள்.

அமைவிடம்:- தரமணி, சென்னை - 600 113. அனுமதி பெற்று பார்வையிட வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22540500 - 501 - 502.

விவேகானந்தர் இல்லம்

மெரினா கடற்கரைக்கே அழகு தரும் அமைதியின் இல்லம் இது. இளைத்துக் கிடந்த இளைஞர்களைத் தீரமுடன் எழுந்து நிற்க கற்றுத்தந்தவர் விவேகானந்தர். ஆரோக்கியமான ஆன்மிகத்தை அனைவருக்கும் வழங்கிய காவியுடையில் வந்த தன்னம்பிக்கை இந்த ஞானியின் பெயரில் அமைந்தது, இந்த நினைவு இல்லம். ஆனால் ஆரம்பத்தில் இந்த மாளிகை இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கட்டிப் பாளங்களை பாதுகாப்பதற்காக 1842 ம் ஆண்டு டுபுடர் ஐஸ் கம்பெனியால் கட்டப்பட்டது. 1874 ஆம் ஆண்டு வரை வர்த்தகம் நடந்த இந்த மாளிகையை பிலிகிரி அய்யங்கார் விலைக்கு வாங்கி கேஸ்டில் கெர்னான் என்று பெயரிட்டார். தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிகழ்த்திவிட்டு கொல்கத்தா திரும்புவதற்கு முன் சென்னையில் பிப்ரவரி 6 முதல் 15 வரை இங்கு தங்கிச் சென்றார். இந்த மாளிகை 1930 ஆம் ஆண்டு அரசின் பொறுப்புக்கு வந்தது. 1963 ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரை மாளிகைக்குச் சூட்டி மகிழ்ந்தது தமிழக அரசு. பிறகு டிசம்பர் 20, 1999 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் விவேகானந்தர் சிலை இங்கு நிறுவப்பட்டது. இந்த நினைவாலயத்தில் 3 ஆவது தளத்தில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட அமைதி குடியிருக்கும் ஒரு தியான மண்டபம் உள்ளது. நினைவு இல்லத்தைப் பார்க்க வருபவர்கள் தியானம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அமைவிடம்:- ஐஸ் ஹவுஸ். திருவல்லிக்கேணி (மெரினா கடற்கரையை எதிர்கொண்ட முகமாக) சென்னை - 600 005. அனுமதிக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. நேரம்:- காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அடுத்து மாலை 3 மணி முதல் மாலை 7 மணி வரை. புதன் கிழமை விடுமுறை. தொலைபேசி - 28446188.

வள்ளுவர் கோட்டம்

சுற்றிலும் மரங்கள் அடர்ந்த பின்னணியில் வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து ரசிப்பது பேரழகு. திருவாரூர் தேரே திரும்பி வந்து நிற்பது போலத் தோற்றம். தேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்ட தேர்க்கால்களும் அலங்கார குதிரைகளும் யானைகளும் கண்கள் கொள்ளா காட்சி. நவீன கட்டடக் கலையின் அற்புதம் வள்ளுவர் கோட்டம். கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள தேர், திராவிட கட்டுமானக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே 4000 பேர் அமரும் அரங்கு உள்ளது. 1330 குறட்பாக்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 133 ஓவியர்கள் வள்ளுவம் குறித்து தீட்டிய ஓவியங்களும் இங்கு பார்வைக்காக அரங்கின் மேல் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்:- வள்ளுவர் கோட்டம் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.3 சிறுவர் ரூ.2. நேரம்:- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 28172177.

அண்ணா சதுக்கம்

சென்னைக்கு வருகிறவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்களில் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது இதுவாகத்தான் இருக்கும். அண்ணா உறங்கும் சதுக்கம். வெண் பளிங்குக் கற்களில் கடற்கரையின் அழகையே மெருகேற்றிக் கொண்டிருக்கிறது. அண்ணா நினைவிடம் அறிஞர் அண்ணா மறைந்தபோது அலறித் துடித்த இதயங்களின் எண்ணிக்கை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணா என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தலைவர். அவருடைய முழுப்பெயர் சி.என்.அண்ணாதுரை. இவரது ஆட்சிக் காலத்தில்தான் சட்டபூர்வமாக தமிழ்நாடு எனப்பெயரிடப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றுரைத்த அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 இல் மறைந்தார். எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீபமும், அவரது உரைவீச்சும் மறக்க முடியாதவை.

அண்ணா சதுக்கம் மெரினா கடற்கரையின் வடக்குப் பக்கம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.

அம்பேத்கார் மணிமண்டபம்

கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடிய மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவாலயம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாக போற்றப்பட்டவரின் இம்மணிமண்டபம் மந்தைவெளிப்பாக்கத்தில் கலையழகு மிளிர அமைந்துள்ளது. ஏப்ரல் 14, 1891 அன்று தோன்றி தன் ஆயுட்காலம் முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி டிசம்பர் 5, 1956 இல் மறைந்த அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இங்கு சித்திகரிக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்:- மந்தைவெளி பாக்கம், சென்னை - 600 028. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.

பாரதியார் நினைவு இல்லம்

'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்ட பாரதி, இன்று தமிழுலகில் மகாகவிஞனாக போற்றப்பட்டு வருகிறார். பாரதி எதிர்கால தலைமுறைகளும் ஆராதிக்கக் கூடியவர். தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் உரைநடையில் தமிழ்க் கவிதையில் பாரதி செய்த புதுமைகள் இன்றும் அவரை நினைவில் வைத்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பிறந்த பாரதி மிகக் குறைந்த வயதிற்குள் கவிதைகள் காவியங்கள் என எழுதிக் குவித்தவர். துயர்மிகு வாழ்விலும் இவரால் எழுதப்பட்ட கவிதைகளில் கவித்துவம் நுங்கும் நுரையுமாகப் பொங்கி வழிகிறது. 'வேடிக்கை மனிதரைப் போல் எனை நினைத்தாயோ! என்று கோபக்குரலில் கேட்ட பாரதியார், திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாகப் போற்றப்படுகிறது. இங்கு பாரதியார் காலத்தின் புகைப்படங்கள் கையெழுத்துப் பிரதிகள் நண்பர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நினைவு இல்லத்தில் உள்ள அரங்கு பொது நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.

அமைவிடம்:- 83 டி.பி. கோயில் தெரு பார்த்தசாரதி கோயில் பின்புறம் திருவல்லிக்கேணி சென்னை - 600 005.

பக்தவத்சலம் நினைவகம்

தமிழக முதல்வர்களில் மறக்க முடியாதவராகக் கருதப்படுகிறவர் பக்தவத்சலம். எளிமையானவர். சிறந்த நிர்வாகியாக ஆட்சி புரிந்தவர். 2.10.1963 முதல் 6.3.1967 வரை முதல்வராக இருந்தார். இவரது நினைவிடம் கிண்டியில் இருக்கிறது. இவர் மறைந்தது. 13.2.1987.

காந்தி நினைவு மண்டபம்

காந்தி மண்டபம் அமைதியின் உறைவிடம். தமிழ்நாட்டிற்கு வந்தபோதுதான் அவர் தம் உடையை மாற்றிக்கொண்டார். அந்த மகாத்மாவின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த மண்டபம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றை நடத்திய காந்தியடிகளின் 'தமிழ்க் கையெழுத்து'ப் பிரதி இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 'வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டியெல்லாம்' என்று காந்தியைப் பாடினார் மகாகவி பாரதி. அகிம்சைக்கு முதலும் கடைசியுமாக காந்திதான் ஞாபகத்திற்கு வருகிறார்.

அமைவிடம்:- கிண்டி, அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.

எம்.ஜி.ஆர். இல்லம்

ஒரு திரைப்படக் கதாநாயகனாக வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி தனிக் கட்சி கண்டவர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை பத்தாண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தவர். மத்திய அரசின் உயரிய கௌரவமான பாரத ரத்னா விருதால் எம்.ஜி.ஆர். கௌரவிக்கப்பட்டார். இவர் வாழ்ந்த இல்லம் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகப் போற்றப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

அமைவிடம்:- 27, ஆற்காடு தெரு, தியாகராய நகர், சென்னை - 17. அனுமதி இலவசம். செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

காமராஜர் நினைவகம்

பொதுவாழ்வில் எளிமை என்ற சொல்லிற்கு வாழ்ந்து காட்டி பொருள் கண்டவர் காமராஜர். அவர் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தாத கர்மவீரர். இவர் முதலமைச்சராகப் பணியாற்றிய 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. படிக்காத மேதை எனப் பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். இலவசக் கல்வி, மதிய உணவு, கிராமங்களுக்கு மின்வசதி என இவர் காலத்தில் தமிழகம் தலைநிமிரத் தொடங்கியிருந்தது. தமிழகக் குழந்தைகளின் கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவு மண்டபம் கிண்டியில் அமைந்துள்ளது. இனிவரும் எல்லா தலைமுறைக்கும் அவரது எளிமை நினைவில் இருக்கும்.

அமைவிடம்:- கிண்டி. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 24349040.

காமராஜர் நினைவு இல்லம்

காமராஜர் என்ற எளிய தலைவரின் வாழ்க்கையை அவர் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். தனது கடைசிக் காலம் வரை இந்த இல்லத்தில்தான் வாழ்ந்தார் அவர். பெருந்தலைவர் என பேரன்புடன் அழைக்கப்பட்ட காமராஜர் குமாரசாமி-சிவகாமி அம்மை தம்பதியின் மகனாக 15.7.1903 இல் விருதுநகரில் பிறந்தார். அந்த உயர்ந்த மனிதரின் எளிமைக்கு எல்லோருமே தலைவணங்க வேண்டியிருக்கும். ஒருமுறை அந்த இல்லத்தின் பக்கம் போய்த்தான் பாருங்களேன்.

அமைவிடம்:- திருமலைப் பிள்ளை சாலை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம் எதிர்புறம், சென்னை - 600 017. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. தொலைபேசி - 24349040.

எம்.ஜி.ஆர். நினைவிடம்

கரங்கள் குவித்திருப்பது போலவும், தாமரை இதழ் விரிந்திருப்பது போலவும் காணப்படும் எம்.ஜி.ஆர். நினைவிடம் மேற்கத்திய பாணியிலான கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் நவீன தோற்றம் பார்வையாளர்களை தினம் வசீகரித்துக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணா துயிலும் நினைவிடத்திற்கு அருகிலேயே இது அமைந்துள்ளது. அவர் 24 டிசம்பர் 1987 அன்று மறைந்தார்.

அமைவிடம்:- சென்னை பல்கலைக்கழகம் எதிர்ப்புறம், சென்னை - 600 005. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.

பெரியார் நினைவிடம்

'தொண்டு செய்து பழுத்த பழம்'; தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும்'; மனக்குகையில் சிறுத்தை எழும் - பாரதிதாசனின் இந்த வரிகள் தந்தை பெரியாரைப் படம் பிடித்துக்காட்டுகிறது. தனது இறுதி மூச்சுவரை தமிழினம் விழித்தெழ பிரச்சாரம் செய்த பகுத்தறிவுப் பகலவன். இவரது கால்பட்ட இடத்தில் எல்லாம் மூடநம்பிக்கை மூச்சிழந்தது. எதற்கும், யாருக்கும் அஞ்சாத சிங்கமென முழங்கிய பெரியார், 17.9.1879 இல் வெங்கடப்ப நாயக்கர் - சின்னத்தாயி அம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழன உணர்வை தமிழர்களுக்கு அளித்த பெரியாரின் வாழ்க்கையே ஒரு பாடமாக விளங்குகிறது. வர்ணாசிரமத்தை வெட்டிச் சீவிய அறிவென்னும் வாள். சுயமரியாதை இயக்கம் கண்ட சுய சிந்தனையாளர். பதவியையும் அதிகாரத்தையும் புறக்கணித்து, தமிழன் தன்மானம் பெறுவதற்காகக் கடைசிவரை சமூகப் போராளியாகவே வாழ்ந்த பெரியார் 24.12.1973 அன்று இயற்கை எய்தினார். இவரது நினைவிடம் பெரியார் திடலில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இங்குள்ள எம்.ஆர்.ராதா மன்றம் பொது நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படுகிறது.

அமைவிடம்:- பெரியார் திடல், ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007. அனுமதி இலவசம். ஞாயிறு விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26618163

ராஜாஜி நினைவகம்

ஒரே சாலையில் அருகருகே பல நினைவிடங்களைப் பார்த்து விடலாம். கிண்டி - அடையாறு பிரதான சாலையில்தான் ராஜாஜி நினைவகமும் இருக்கிறது. விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தார். அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சிறந்த ராஜதந்திரி, மூதறிஞர் என்று புகழப்பட்டவர்.

அமைவிடம்:- கிண்டி, சென்னை - 600 032. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22351941.

மொழிப்போர் தியாகிகள் மண்டபம்

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மொழிப்போருக்கு முக்கியமான பங்கு உண்டு. கட்டாய இந்தி எதிர்ப்பை எதிர்த்து பலரும் களத்தில் குதித்தனர். தமிழ் மொழிக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை நினைவுகூர்வதற்காக இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மொழியின் மீட்சிக்காக உயிர் தந்த தமிழ்ப் போராளிகளின் தியாகத்தை இங்கு வருபவர்கள் அறிவர். மொழிப்போர் தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள், திருச்சி சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிதம்பரம் ராஜேந்திரன், விராலிமலை சண்முகம், தாளமுத்து நடராசன்.

அமைவிடம்:- காந்தி மண்டப வளாகம், கிண்டி, சென்னை - 32. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.

கிண்டி சிறுவர் பூங்கா

நவீன தலைமுறையின் குழந்தைகள் சிட்டுக்குருவிகளைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பையும்கூட இழந்துவிட்டார்கள். பள்ளிப் பாடங்களில் நேரில் பார்த்து அறிவதைப் படம் பார்த்து அறிந்து கொள்கிறார்கள். மரங்களில், புல்வெளிகளில், நீர் நிலையில் வாழும் கழுகுகள், புறா, வாத்து, பலவண்ணக் கிளிகள், வான் கோழிகள் என பறவையினங்களை இங்கு பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காட்டுச் சூழலில் இன அழிவின் விளிம்பில் உள்ள புள்ளிமான், வெண்மான், புனுகுப் பூனை மற்றும் மீன் கொத்தி, குயில் போன்ற பறவையினங்கள் இங்கு பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன.

அமைவிடம்:- கிண்டி, சென்னை - 32. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22353623.

பாம்புப் பண்ணை

ஒற்றைப் பாம்பைக் கண்டால் ஊரே நடுங்கும் என்பார்கள். பாம்புப் படையைக் கண்டால் எப்படி? ரோம்லஸ் ஜிட்டேகர் என்ற வெளிநாட்டவரின் கனவுப் பண்ணையாக உருவானது இந்த பாம்புப் பண்ணை. மலைப்பாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என பஞ்சமில்லாமல் பல்வேறு இன பாம்புகள் கண்ணாடிக் கூண்டுகளில் நம்மை வரவேற்கும். இங்கு பார்வையாளர்கள் முன்னால் நல்ல பாம்பின் கொடிய நஞ்சை எடுப்பார்கள். பாம்புகளின் பண்புகளை விளக்குவார்கள். ஆமை, கடலாமை, முதலை போன்ற ஊர்வன வகைகளும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

அமைவிடம்:- கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அடுத்துள்ளது. செவ்வாய் விடுமுறை. கட்டணம் பொpயோர் ரூ.5 சிறுவர் ரூ.1. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30. தொலைபேசி - 22353623.

இந்திய குடியரசின் 50 ஆண்டு நினைவுத் தூண்

கடற்கரைச் சாலையில் காலாற நடந்தபடியே வரலாற்றின் வழித் தடங்களைப் பார்த்து மனம் நிறைவு கொள்ளலாம். இந்தியா குடியரசாக மலர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டது இந்தப் பொன்விழா நினைவுத்தூண். இது 2001 ஜனவரி 25-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

அமைவிடம்:- மெரினா கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் அருகில், மயிலாப்பூர் சென்னை - 600 004.

காந்தி கண்ட கனவின் நினைவுச் சின்னம்

காந்தி கனவுகண்ட மாளிகை இப்போதில்லை. அதற்குப் பதிலாக ஒரு நினைவுச் சின்னம். அது என்ன கனவு? அது 1919 மார்ச் 18. அன்றுதான் ரவுலட் சட்டம் என்ற கொடுஞ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றிரவு திலகர்பவன் இருந்த இந்த இடத்தில் தங்கியிருந்த மகாத்மா காந்தி விஷயத்தை அறிந்ததும் தூக்கமின்றி தவித்தார். இச்சம்பவம் பற்றி காந்தியே சொல்லியுள்ளார். "அன்றிரவு நான் தூக்கமும் விழிப்புமாகத் தவித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு யோசனை வெடித்தது. அதுவும் ஒரு கனவில் முழு நாட்டையும் ஒத்துழையாமையில் ஈடுபடும்படி அறைகூவல் விட வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் அனைத்தும், இது ஒர் அற்புதமான அனுபவம்." காந்தியே பகிர்ந்து கொண்ட அந்தக் கனவு ஓர் ஏகாதிபத்தியத்தையே புரட்டிப் போட்ட கனவல்லவா?

அமைவிடம்:- சோழா ஹோட்டல் முன்பு, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, சென்னை - 600 004.

வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவுச் சின்னம்

'வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம்' ஆங்கிலேயர்களை கப்பலேற வைத்தது. இந்த இயக்கம் கண்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நினைவுச் சின்னம். இது 02.10.1993 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அமைவிடம்: காந்தி மண்டபம் அருகில், கிண்டி, சென்னை - 600 032.

அரசு கவின் கலைக்கல்லூரி

கலைக்காக ஒரு கல்லூரி, ஆங்கிலேயர்களின் கலை மனம் தந்த கலைப்பள்ளி இது. ஆரம்பக் காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களுக்குத் தேவையான நாற்காலி, மேஜை போன்ற அலுவலகப் பயன்பாட்டிற்கான பொருட்களை கலையழகுடன் தயாரித்துக் கொண்டிருந்தது. இந்தப் பள்ளி, பிற்காலத்தில் தனி ஓவிய சிற்ப பாணியைத் தனக்கென உருவாக்கிக்கொண்டது. பசுமையான சூழலில் பழமை மாறாத கட்டடங்களுடன் கவின் கலையை மாணவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. இந்தக் கல்லூரி வளாகமே ஒரு கலைப்படைப்பாக உருமாறி புதிய கலைஞர்களை செதுக்கித் தருகிறது. இது 1850 ஆம் ஆண்டு டாக்டர் அலெக்ஸாண்டர் ஹண்டர் என்பவரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர் சிற்பி ராய் சௌத்ரி. இந்தப் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியர் இவரே. அவரது காலத்தில் இந்தக் கல்லூரி தேசிய அளவில் புகழ்பெற்றது. சென்னையின் அடையாளமாக மாறிப் போய்விட்ட உழைப்பாளர் சிலையும் காந்தி சிலையும் ராய்சௌத்ரியின் கலை வண்ணத்தில் உருவானவை. சந்தானாராஜ், முனுசாமி, தனபால், அல்போன்சா, ஆதிமுலம், ஆர்.பி.பாஸ்கரன், தெட்சிணாமுர்த்தி, சந்ரு போன்ற தமிழகத்தின் பிரபல கலைஞர்கள் இக்கல்லூரியில் பயின்றவர்களே. இங்குதான் இந்தியாவிலேயே முதன் முதலாக புகைப்படக் கலை வகுப்பு தொடங்கப்பட்டது.

அமைவிடம்:- 31 தந்தை ஈ.வே.ரா. சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.

லலித்கலா அகாதெமி

ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற கவின் கலைகளை வளர்த்தெடுக்கும் மத்திய அரசு நிறுவனம். இதுவொரு தன்னாட்சி அமைப்பு. தொடங்கப்பட்ட ஆண்டு 1978. சமகாலக் கலையை வளர்ப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தருவதே இதன் உயரிய நோக்கம். காட்சிக் கூடம், கலைப்பட்டறை போன்ற பிரத்யேக வசதிகள் வளரும் கலைஞர்களுக்கு லலித்கலா அகாதெமி செய்து தரும். இங்கு கல், உலோகம், மரம், செப்புச் சிலைகள், ஓவியம் வரைகலை, கலப்பு ஊடகப் படைப்புகள் போன்றவையும் சேமிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு வளரும் கலை அருங்காட்சியகம். இங்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுடைய படைப்புகளின் கண்காட்சி அவ்வப்போது நிகழும். இந்தக் கலைக் கோயிலுக்குள் நாம் சென்று வருவதே ஒரு தனி அனுபவமாக மாறும்.

அமைவிடம்:- ரீஜனல் சென்டர், 4 கிரிம்ஸ் சாலை, சென்னை - 600 006. நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள். தொலைபேசி - 28291692 - 28290804.


Pages:-     1     2     3     


   Contact: ttdc@vsnl.com An Official Website Of Tamilnadu Tourism Development Corporation and Department Of Tourism